Saturday, January 14, 2012

"துரத்தப்பட்டது ஏன்?" : வாய் திறக்க 'சசிகலா' நடராஜன் முடிவு!

ஆளும் அதிமுகவிலிருந்தும், அதன் 'தோட்டத்திலிருந்தும்' கூண்டோடும் குடும்பத்தோடும் நீக்கப்பட்டது ஏன் என்பது பற்றி 'வாய் திறக்க' சசிகலாவின்  கணவர் நடராஜன் ஆயத்தமாகி விட்டாராம். 

நாளை மறுநாள் முதல் மூன்று நாள்கள்  தஞ்சையில், தனக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள கலை இலக்கியத் திருவிழாவில் நடராஜன் பல இரகசியங்களைப் பேசப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.



நடராஜன் தரப்பு அனைத்து மன்னார்குடி அரசியல்வாதிகளும் கலந்துகொள்ள உள்ள இவ்விழாவில் தான் சார்ந்த முக்குலத்தோர் வகுப்பு பிரமுகர்களையும், நண்பர்களையும் அவர் அழைத்துள்ளாராம். இந்த நிகழ்ச்சியில் தனது பலத்தைக் காட்டவும், தேவர் சமூகத்தினர் தன் பக்கம்தான் உள்ளனர் என்பதை காட்டவும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்களையும் கண்டிப்பாக வருமாறு அழைத்துள்ளாராம் நடராஜன்.

ஜனவரி 15ம் கலை, கலாச்சார நிகழ்ச்சியாக நடைபெறும். ஜனவரி 16ம் தேதி 2வது நாள் விழாவில், அடுத்த நாள் முல்லைப் பெரியாறு-வரலாறு, பிரச்சினைகள் மற்றும் தீர்வு என்ற பெயரில் மாநாடாக நடைபெறுகிறது.

3வது நாளான ஜனவரி 17ம்தேதி தான் எழுதிய மூன்று புத்தகங்களை வெளியிடுகிறார். தமிழர் இயக்க பழ.நெடுமாறன்,  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனராம்.

விழாவின் இறுதி நாளில் நடராஜன் சிறப்புரையாற்றுகிறாராம் .அப்போதுதான் ஜெயலலிதா குறித்தும், அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது குறித்தும் விரிவான விளக்கம் அளித்துப் பல்வேறு தகவல்களை அவர் வெளியிடப் போவதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment