Friday, January 13, 2012

ருஷ்டி:எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் – மத்திய அரசு


பரேலி:சர்ச்சைக்குரிய எழுத்தாளரும், இந்திய வம்சாவழியை சார்ந்தவருமான சல்மான் ருஷ்டியின் இந்திய வருகை சர்ச்சையை கிளப்பி அரசியல் அரங்கில் சூடான வாக்குவாதமாக மாறிய சூழலில் மத்திய அரசு தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சார்ந்தவருக்கு அரசு அளிக்கும் பர்ஸன் ஆஃப் இந்தியன் ஆரிஜின்(பி.ஐ.ஒ) கார்டு கைவசம் உள்ளவர்கள் இந்தியாவிற்கு வருகை தருவதை எதிர்ப்பவர்கள் தொடர்புடைய அலுவலகத்தில் புகார் அளிக்கவோ அல்லது நீதிமன்றத்தை அணுகவோ செய்யலாம் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.


இம்மாத இறுதியில் ஜெய்ப்பூரில் நடைபெறவிருக்கும் இலக்கிய விழாவில் பங்கேற்க வருகை தரும் சல்மான் ருஷ்டிக்கு விசா அளிக்கக்கூடாது என தேவ் பந்த் தாருல் உலூம் துணைவேந்தர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ருஷ்டி விவகாரத்தை ஊதிப்பெருக்கி தேர்தலில் ஆதாயம் பெறும் தந்திரமாக மாற்ற காங்கிரஸ் முயற்ச்சிப்பதாக பா.ஜ.க உள்பட
எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ருஷ்டியின் வருகையை பிரச்சனையாக்க தேவையில்லை. இது சட்டரீதியான உரிமைகள் தொடர்பான விவகாரமாகும். இதுத் தொடர்பாக மத்தியிலோ, மாநில அளவிலோ காங்கிரஸ் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என இதுத்தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். பி.ஐ.ஒ கார்டு கைவசம் உள்ள இந்திய வம்சா வழியை சார்ந்தவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வருகை தரலாம். அதற்கு விசா தேவையில்லை என குர்ஷித் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ருஷ்டி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்பதை எதிர்ப்போம் என பா.ஜ.கவின் சிறுபான்மை பிரிவு அறிவித்துள்ளது. ருஷ்டி ஜெய்ப்பூரில் நுழைவதை அனுமதிக்கக் கூடாது என அவ்வமைப்பு ராஜஸ்தான் மாநில அரசுக்கு
உத்தரவிட்டுள்ளது. ருஷ்டி நகரத்தில் நுழைவதை தடுப்போம் என இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் முனவ்வர் கான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment