Saturday, January 14, 2012

வெள்ளந்தி நோக்கத்தில் தான் வெளியிட்டோம் - நக்கீரன் வருத்தம்!


"மாட்டுக் கறி சாப்பிடும் மாமீ நான்" என்று நக்கீரன் வார இதழில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா குறித்து வெளியான செய்தியை அடுத்து நக்கீரன் அலுவலகம் தாக்கப் பட்டது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நக்கீரன் கோபால் மற்றும் காமராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்து வெளியாக உள்ள நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா குறித்த அவதூறுச் செய்திக்கு மன்னிப்பு கேட்டுச் செய்தி வெளியிட வேண்டுமென உத்தரவிட்டனர்.



நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று வெளியான நக்கீரன் இதழில் "ஜனவரி 7-10 தேதியிட்ட இதழில் அட்டைப் படக் கட்டுரையாக வெளியான செய்தி எந்த உள்நோக்கமும் இன்றி வெளியிடப் பட்டதாகும். ஆளுங்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கொள்கை சார்ந்தும் அரசியல் ரீதியாகவும் சாதகமாக உள்ள தகவல் என்ற வெள்ளந்தி நோக்கத்தில் தான் வெளியிட்டோம்.

எந்த வகையிலும் மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் புகழுக்கோ, இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கோ களங்கம் கற்பிக்கும் எண்ணம் நக்கீரனுக்குச் சிறிதளவும் இல்லை. எவ்வித உள்நோக்கமுமின்றி வெளியிடப் பட்ட அந்த அட்டைப் படச் செய்தியால் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, அவரைச் சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எவர் ஒருவரேனும் மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக நக்கீரன் தனது மனப் பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment