Saturday, January 7, 2012

தோல்வியை நோக்கி செல்லும் அன்னாவின் ஊழல் எதிர்ப்பு நாடகம்-ர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் உள்ளோம்- கேஜ்ரிவால்



டெல்லி: அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் ஏதாவது தவறான முடிவை எடுத்து விட்டால் அது ஒட்டுமொத்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கும் பெரும் சீரழிவாக அமைந்து விடும் என்று அன்னா ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தோல்வியைத் தழுவி விட்டதை அரைமனதோடு ஒப்புக் கொண்டுள்ளார் அந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கேஜ்ரிவால்.


அன்னா தொடங்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கம் இன்று பெரும் குழப்பத்தில் மூழ்கியிருப்பதை கேஜ்ரிவாலின் பேச்சு வெளிப்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் அன்னா பங்கேற்பார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அவர் வர மாட்டார் என்று நேற்று கிரண் பேடி கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கேஜ்ரிவால் கூறியிருப்பதன் மூலம் அவர்களின் பெரும் குழப்பம் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து தங்களுக்கு ஆலோசனை கூறுமாறு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது அன்னா ஹஸாரே குழு.

ஊழல் எதிர்ப்பு இயக்கமாக மட்டும் இருந்நதவரை அன்னா குழுவுக்கு மக்கள் மகத்தானதாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக அது மாறியபோதுதான் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்தது. அன்னாவுக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்தவர்கள் கூட ஊழல் ஒழிப்பு என்பதிலிருந்து தடம் மாறி அரசியல் பாதைக்குள் நுழைவது தவறு என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் இதை அன்னா குழுவினர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினர். இது அவர்களுக்கே பாதகமாக தற்போது அமைந்து விட்டது.

குறிப்பாக ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸை எதிர்த்து தீவிரமாகப் பிரசாரம் செய்வோம் என்று அன்னாவும், அவரது குழுவினரும் கூறியதை மக்களில் பெரும்பாலனோர் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்னா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான அரவிந்த் கேஜ்ரிவாலிடம், பாஜகவுக்கு உ.பி. தேர்தலில் ஆதரவு தருவீர்களா என்று கேட்டனர் செய்தியாளர்கள். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு முன்னாள் பகுஜன்சமாஜ் கட்சி அமைச்சரை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ள கட்சிக்கு எப்படி நாங்கள் ஆதரவு தர முடியும் என்று கேட்டார்.

அன்னா ஹஸாரேவின் குழுவுக்கு தற்போதுதான், இந்தியாவில் உள்ள எந்தக் கட்சியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு தரும் தகுதியுடன் இல்லை என்பதே தெரிய வந்துள்ளது. பாஜக சுத்தமான கட்சி என்று நம்பி அந்தக் கட்சிக்கு மறைமுகமான ஆதரவு கொடுத்து வந்த அன்னா குழுவினர், பாஜகவும் அப்படித்தான் என்ற கருத்துக்கு இப்போதுதான் வந்துள்ளனர்.

மேலும் குழு உறுப்பினர்களும் கூட இப்போது ஆளுக்கு ஒரு கருத்தாக பேச ஆரம்பித்துள்ளனர். கிரண் பேடி ஒன்றைப் பேசுகிறார். சந்தோஷ் ஹெக்டே நான் சொல்வதைக் கேளுங்கள் என்று சில ஆலோசனைகளை முன்வைக்கிறார். கேஜ்ரிவால் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். ஒரே மாதிரியான குரல் இப்போது அன்னா குழுவிலிருந்து வருவதில்லை.

கேஜ்ரிவால் மேலும் கூறுகையில், அன்னாவுக்கு உடல் நலம் சரியல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தான் மிகவும் மோசமான முறையில் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற வருத்தம்தான் அதிகம் வாட்டுகிறது. எந்தக் கட்சியும் அவருக்கு ஆதரவு தர முன்வரவில்லை. இதுதான்அவருக்கு வேதனையாக உள்ளது.

சிலர் நாங்கள் தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். ஆனால் அதற்கான வலிமை எங்களிடம் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அடுத்து என்ன செய்வது என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அது தவறாகவே போய் முடியும் என்றார் கேஜ்ரிவால்.



No comments:

Post a Comment