Tuesday, January 3, 2012

'தானே' புயல், சூறாவளி, மழையால் மின்வாரியத்திற்கு ரூ. 865 கோடி இழப்பு!

சென்னை: தானே புயல் மற்றும் அதையொட்டி வீசிய பேய்த்தனமான சூறாவளிக் காற்று, கன மழை காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு ரூ. 865 கோடி அளவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அரசு கூறுகிறது. இந்த நிலையில் மிகப் பெரிய நஷ்டத்தை மின்வாரியத்திற்கு தானே புயல் கொண்டு வந்து சேர்த்து விட்டது.




தானே புயல், சூறாவளிக் காற்று, கன மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் மின்கம்பங்கள் பெயர்ந்து விழுந்து விட்டன. இவற்றை சீரமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.முதல் கட்டமாக 6000 கம்பங்கள் நிறுவப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.


கடலூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் 10 மின் கோபுரங்கள் உடைந்து விட்டன. இவற்றை சரி செய்யும் பணியில் 100 மின்வாரிய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 620 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இங்கு மின் விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.


மின்விநியோகத்தை சீரமைப்பதற்காக நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் தனியாரிடமிருந்து மின்சாரத்தைப் பெற்று வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மின்வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் வரவில்லை. குறிப்பாக கிராமங்களில் மின்சாரம் முற்றிலும் இல்லை. இதனால் அப்பகுதிகள் தொடர்ந்து இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.


மின்சார விநியோகம் சீரடைய மேலும் சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment