Friday, July 1, 2011

குஜராத் கலவரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அழிப்பு


2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான குஜராத் மாநில புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி அழைப்பின் ஆவணங்கள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றிய பதிவேடுகள் மற்றும் வாகனப் பதிவெண் புத்தகங்கள் ஆகியவை 2007ஆம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்களுக்குப் பிந்தைய சம்பவங்கள் தொடர்பாக நானாவதி கமிஷன் விசாரித்து வருகிறது. நானாவதி கமிஷனில் அரசு வழக்கறிஞராக உள்ள எஸ்.பி.வாகீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு விதிகளின்படி அந்த ஆவணங்கள் 5 ஆண்டுகள் கழித்து அழிக்கப்பட்டன என்றார்.

அரசு விதிகளின்படி தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், வாகனப் பதிவு புத்தகங்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றிய டைரி ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அழிக்கப்பட்டுவிட்டன என்று வாகீல் கூறியுள்ளார்.

2002ஆம் ஆண்டின் புலனாய்வு போலீசின் ஆவணங்கள் 2007ஆம் ஆண்டு அழிக்கப்பட்டன. அவற்றைக் கேட்கும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்டுக்கு அவை கிடைக்காது என்று தெரிந்திருக்கும் என்றும் வாகீல் கூறியுள்ளார்.

முன்னதாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியான 2002 ஆம் ஆண்டு கலவரங்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கும் புலனாய்வு பிரிவுக்கும் உத்தரவிடக் கோரி மே மாதம் நானாவதி கமிஷனில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் விண்ணப்பித்திருந்தார்.

குஜராத் வன்முறைச் சம்பவங்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பட் பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக இரு நபர் குழுவின் விசாரணையின்போது பட்டுக்கும் அரசு வழக்கறிஞர் வாகீலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பட் அவரது எல்லையைத் தாண்டிவிட்டார் என வாகீல் கூறினார்.

No comments:

Post a Comment