Tuesday, July 12, 2011

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை பதிவு செய்வது ஒத்திவைப்பு

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விரல் ரேகைகளைப் பதிவு செய்யும் திட்டத்தை அந்நாட்டு அரசு காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
மலேசியாவில் ஏராளமான இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கணக்கெடுத்து விரல் ரேகைகளைப் பதிவு செய்து வைக்க மலேசிய அரசு திட்டமிட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்த இப்பணியை ஒத்தி வைப்பதாக மலேசிய அரசு அறிவித்தது.




இத்தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஸ்ஹமூதின் ஹுசைன், இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம், இதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன. எனினும் முதலில் உரிய அனுமதியுடன் மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து கணக்கெடுத்து, அவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

அடுத்த கட்டமாக சட்டவிரோதமாக இங்கு தங்கியுள்ளவர்களின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என்றார் அவர். மலேசியாவில் கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள், தோட்டப்பணியில் ஏராளமான வெளிநாட்டவர்கள் உள்ளனர். முக்கியமாக இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு தங்கியுள்ளனர். இப்போதும் ஆண்டுதோறும் மலேசியாவுக்கு அதிகமானோர் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்களின் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் இங்கேயே தங்கி விடுகின்றனர். அவ்வாறு தங்குபவர்களை மலேசிய அரசு கண்டறிந்து அவர்களை சொந்த நாட்டு அனுப்பி வைக்கிறது. அவர்களுக்கு சிறைத் தண்டனை போன்றவை வழங்கப்படுவதில்லை.

No comments:

Post a Comment