Sunday, July 10, 2011

பாரதிய ஜனதா கட்சியால் நாட்டுக்கு ரூ. 43,000 கோடி நஷ்டம்!

புதுடெல்லி: பா.ஜ.க ஆட்சியின் போது கடைப்பிடிக்கப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கையின் காரணமாக நாட்டிற்கு ரூ.43,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது தொலைத் தொடர்புத்துறை கடைப்பிடித்த ‘மைக்ரேஷன்’ கொள்கை குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் விளக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி குழு முன்பு தொலைத் தொடர்புத்துறை தனது விளக்கத்தை அளித்தது.



அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது கடைப்பிடிக்கப்பட்ட மைக்ரேஷன் கொள்கையால் நாட்டுக்கு ரூ. 43,000 கோடி இழப்பு ஏற்பட்டது. அதன் சரியான தொகை ரூ. 43,523.92 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஊழலை ஆரம்பித்து வைத்தவர்களே பாரதிய ஜனதா தான் என்பது குறிப்பிட தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதில் நேற்று தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர்கள் பலரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாஜக கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரியை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது மைக்ரேஷன் கொள்கை காரணமாக நாட்டுக்கு ரூ. 43,500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக நேற்று தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது திருப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இது குறித்து பேட்டியளித்த பி.சி.சாக்கோ, ’மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது செய்யப்பட்ட கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு அப்போதைய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment