Tuesday, July 5, 2011

முத்துப்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தல்


ஜூலை 3: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
  
இந்தச் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட மாநாடு முத்துப்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.   மாநாட்டில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர்கள் வி. வீரசேனன் (திருவாரூர்), எம். செல்வராசு (நாகை), ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர். பெருமாள், மாவட்டப் பொருளாளர் அழகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். சந்திரசேகரஆசாத், நிர்வாகி ஆர்.எஸ். ராமநாதன் உள்ளிட்டோர் பேசினர்.   மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட அமைப்பு இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:

  தலைவர் எம். முருகையன், செயலாளர் பி. சின்னதுரை, பொருளாளர் பி. சின்னப்பா, துணை நிர்வாகிகள் எஸ். தேவதாஸ், டி. மகாலிங்கம், எம்.எம். முருகையன், கே. வீரமணி.  நாகை மாவட்ட நிர்வாகிகள் விவரம்:
தலைவர் எஸ். நாகப்பன், செயலாளர் ஏ.எம். தாஸ், பொருளாளர் எஸ். தனபால், துணை நிர்வாகிகள் வி. ஆறுமுகம், எஸ். நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோருக்கு மாநாட்டில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  கச்சத்தீவை திரும்பப் பெறவேண்டும், கடலுக்குச் செல்லும் மீனவர்களைப் போல, உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும், இங்கு மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் அமைத்து, அரசு மானியத்தில் வழங்கப்படும் டீசல் விநியோக நிலையம் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  
தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களில் இதுவரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. இதில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவோ அல்லது உள்நாட்டு மீனவர்களுக்கு புதிய மீனவர் கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பின்போது இயற்கை இடர்பாடு காலங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment