Monday, July 11, 2011

உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து

ஃபதேபூர், ஜூலை 10: உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தடம்புரண்டது; இந்த சம்பவத்தில் 35 பேர் இறந்தனர்; 200 பேர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டில் நடந்த மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
விபத்துக்குள்ளான கல்கா மெயில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து புறப்பட்டு தில்லிக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் மால்வா அருகில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.20 மணியளவில் வந்து கொண்டிருந்தது. லக்னெüவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மால்வா ரயில் நிலையம் அருகே வந்தபோது இந்த ரயில் திடீரென தடம்புரண்டது. ரயிலின் 15 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி கவிழ்ந்து நொறுங்கின. இதில் 10 ரயில் பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் நொறுங்கின. இச்சம்பவத்தில் 35 பயணிகள் இறந்தனர், என்ஜின் டிரைவர் உள்பட 200 பேர் காயம் அடைந்துள்ளதாக ஃபதேபூர் முதன்மை மருத்துவ அதிகாரி கே.என்.ஜோஷி தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகேயுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.






மிகவேகமாக வந்த ரயில்: தகவல் கிடைத்ததும் மீட்புப்படையினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான கல்கா மெயில் அதிகபட்ச வேகமான 108 கிலோ மீட்டர் வேகத்தில் வந்துள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விபத்து குறித்து வடக்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் எச்.சி.ஜோஷி கூறுகையில், விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
மீட்புப்பணி பாதிப்பு: விபத்து குறித்து ஃபதேபூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராம்பரோஸ் கூறுகையில், இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். நொறுங்கிய 15 பெட்டிகளில் 2 பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதில் சிக்கியவர்களை மீட்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. அப்பெட்டிகள் துண்டிக்கப்பட்டு மீட்புப்பணி நடந்து வருகிறது. என்ஜினுக்குப் பின்னால் இருந்த பயணிகள் பொதுப்பெட்டி மிகவும் மோசமான நிலையில் நொறுங்கியுள்ளது. அவற்றில் பல பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனால் "கேஸ் கட்டர்' இயந்திரம் கொண்டுவரப்பட்டு அப்பெட்டியைத் துண்டித்து உள்ளே சிக்கியிருக்கும் பயணிகளை மீட்க முயற்சி நடக்கிறது என்றார் எஸ்பி ராம்பரோஸ்.
ராணுவம் விரைந்தது: விபத்து குறித்து ரயில்வே இணை அமைச்சர் முகுல்ராய் கூறியதாவது: விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் மீட்புப்பணியை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் மீட்புப்பணியில் ஈடுபட அலகாபாத் மற்றும் கான்பூரிலிருந்து 120 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில் பயணிகள் பற்றிய தகவலை அறிய ஹவுரா மற்றும் தில்லியில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல் தேசிய பேரிடர் மீட்புப்படையும் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அலகாபாத் மற்றும் கான்பூரில் இருந்து தலா ஒரு மீட்பு ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
உறவினர்கள் கதறல்: கல்கா ரயில் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், அதில் பயணம் செய்தோரின் உறவினர்கள், நண்பர்கள் அலறியடித்தபடி ஹவுரா மற்றும் கான்பூர் ரயில் நிலையங்களில் திரண்டனர். அவர்கள் விபத்தைப்பற்றி அறிந்ததும் கதறி அழுதனர். அவர்களது உறவினர்கள் நிலை என்பது குறித்து அவர்களால் உடனடியாக அறிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். இதையடுத்து ஹவுராவில் கூடிய உறவினர்களை அழைத்துச்செல்ல சிறப்பு ரயில் ஒன்றை மால்வாவுக்கு கிழக்கு ரயில்வே இயக்கியது.
இந்த விபத்தால் அலகாபாத்-கான்பூர் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன

No comments:

Post a Comment