Sunday, June 12, 2011

கட்டணம் ரூ.2,990: தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்; ஆர்வமுடன் முன்பதிவு செய்யும் பயணிகள்


தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்க விழா நாளை (திங்கட்கிழமை) மாலை தூத்துக்குடி துறைமுகத்தில் நடக்கிறது. விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கப்பல் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். ஸ்காடியா பிரின்ஸ் பயணிகள் கப்பல் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கும் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி, கொழும்பு ஆகிய 2 இடங்களிலும் மாலை 6 மணிக்கு கப்பல் புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு அதாவது 14 மணி நேரத்தில் சென்றடையும்.   9 அடுக்குகளை கொண்ட இந்த ஏ.சி. கப்பலில் 1044 பயணிகள் மற்றும் 200 ஊழியர்கள் பயணம் செய்யலாம். 9 மாலுமிகள் இருப்பார்கள். இந்த கப்பல் மணிக்கு 13 கடல் மைல் முதல் 18 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. 111 எக்கனாமிக் அறையும், மாற்று திறனாளிகளுக்கு 2 சிறப்பு வசதி கொண்ட அறையும், 22 சூப்பர் டீலக்ஸ் அறையும், 169 டீலக்ஸ் அறையும் மற்றும் 11 முதல் வகுப்பு அறைகள் ஆக மொத்தம் 317 அறைகள் உள்ளன.
மேலும் முதல் 3 அடுக்குகளில் பயணிகள் கொண்டு செல்லும் சரக்குகளை வைக்கவும், 4-வது அடுக்கில் இருந்து 7-வது அடுக்குவரை பயணிகள் அறைகளும் உள்ளன. 8-வது அடுக்கில் கப்பல் ஊழியர்களும், 9-வது அடுக்கு திறந்த வெளியாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய ஓட்டல், மீட்டிங் ஹால், ஆஸ்பத்திரி, நடன அறைகள் மற்றும் பார் வசதி உள்ளது.

300 டன் சரக்குகளை கொண்டு செல்லக் கூடிய திறன் கொண்டது.   தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்து 990-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆயிரத்து 550-ம், கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கு வர குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 128-ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.20 ஆயிரத்து 470-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கப்பல் சேவை தொடக்க விழா சிறப்பு கட்டணமாக நாளை (திங்கட்கிழமை) மட்டும் ரூ.2 ஆயிரத்து 223-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கப்பலில் பயணம் செல்லும் பயணிகளுக்கு கப்பலுக்கு சென்ற உடன் குளிர்பானம் மற்றும் இரவு உணவு விலையும் பயண கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.
பயணிகள் கப்பலில் உள்ள கேண்டீனில் உணவுப் பண்டங்களை விலை கொடுத்து வாங்கி சாப்பிடலாம். இதில் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையும் உண்டு. தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் டிக்கெட் விற்பனை உரிமத்தை பல்வேறு தனியார் நிறுவனத்தினர் பெற்று உள்ளனர்.
மேலும் கப்பலில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் 4 மணி நேரத்துக்கு முன்பாகவே துறைமுகத்துக்கு வரவேண்டும். டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். எக்கனாமிக் அறை வகுப்பு பயணிகள் 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள் 200 கிலோ எடை வரையும் லக்கேஜ் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக பாஸ்போர்ட் வைத்து இருக்க வேண்டும். கப்பலில் இலங்கை சென்றதும் அவர்களுக்கு அந்த நாட்டு அரசு சார்பில் சுற்றுலா விசா வழங்கப்படும். இந்த விசா 30 நாட்கள் வரை செல்லுபடியாகும். அதற்கு முன்பாக பயணிகள் கொழும்பில் இருந்து தூத்துக்குடி வர வேண்டும்.   தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பலில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

  

No comments:

Post a Comment