Sunday, June 5, 2011

நள்ளிரவில் ராம்தேவ் அதிரடி கைது-காவி தீவிரவாதிகளின் இரண்டாவது நாடகமும் முடிவுக்கு வந்தது.


டெல்லி: ஊழலை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக போராட்ட இடத்திலிருந்து அகற்றிய போலீஸார் பின்னர் அவரைக் கைது செய்து டேராடூனுக்குக் கொண்டு சென்றனர்.உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்ததால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும், ஊழலில் ஈடுபடுவோரை கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராம்தேவ். அவருடன் சங் பரி்வார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமிய, ஜைன மதத்தவரும் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கானோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

ராம்தேவை சமாதானப்படுத்த அரசுத் தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் தனது நடவடிக்கைகளில் ராம்தேவ் உறுதியாக இருந்ததால் அவை தோல்வியிலேயே முடிந்தன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் போலீஸார் திடீரென ராம்லீலா மைதானத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவைத் தாண்டி ஒரு மணியளவில் போலீஸார் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்திற்குள் புகுந்து சுற்றி வளைத்தனர். ஒரு குழுவினர் ராம்தேவ் அமர்ந்திருந்த மேடையை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து போராட்டம் நடத்தி வந்தவர்கள் மேடையை சுற்றி வளைத்து ராம்தேவை கைது செய்வதிலிருந்து தடுக்க முயன்றனர். இதனால் மேடையில் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேடையிலிருந்து குதித்தார்

ஒரு கட்டத்தில் ராம்தேவ் மேடையிலிருந்து கீழே குதித்து ஆதரவாளர்களுடன் நின்று கொண்டார். இதையடுத்து போலீஸார் கடுமையாக போராடி ராம்தேவை அவர்களிடமிருந்து பிரித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆதரவாளர்கள் போலீஸாருடன் மோதலில் குதித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் ஆதரவாளர்களைக் கலைத்தனர். இதனால் அவர்கள் சிதறி ஓடினர். பின்னர் ராம்தேவை பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்து அப்புறப்படுத்திக் கூட்டிச் சென்றனர்.

டேராடூன் கொண்டு செல்லப்பட்டார்

கைது செய்யப்பட்ட ராம்தேவை டெல்லியை விட்டு வெளியேற்றிட போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை பாலம் விமான நிலையத்திற்கு ராம்தேவ் கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் மூலம் அவரை டேராடூனுக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

டெல்லிக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் டெல்லிக்கு ராம்தேவ் வந்து போராட்டத்தை தொடருவார் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுவதால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment