Wednesday, June 15, 2011

ஈழத்தமிழர்கள் ரத்தத்திலே ஒட்டப்படும் கப்பல்!!

JUNE 15, தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு.


சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.

ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.

தமிழனத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச்சலுகைகளை நிறுத்தி விட்டது.

ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு.





இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம். இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment