Saturday, June 18, 2011

காஸா முற்றுகை சர்வதேச சமூகத்தின் மெத்தனப் போக்கின் விளைவே


"கடந்த ஐந்து வருட காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் அமுல் நடத்தப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகை குறித்து சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றன. இந்த மெத்தனப் போக்கினால், சர்வதேச சட்டத்துக்குப் புறம்பான இந்த முற்றுகையில் சர்வதேச சமூகமும் பங்குகொண்டுள்ளது என்றுதான் நாம் கருதவேண்டி இருக்கின்றது" என காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், "திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்துக்கொண்டு ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 காஸாவை நோக்கிப் பயணப்பட உள்ளது. இந்தப் பிரயாணத்தின் போது, நிவாரண உதவிக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கோ பலருக்கோ ஏதேனும் இடர்ப்பாடுகள் நேர்ந்தாலும்கூட, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஏனையோர் தமது பணியை முன்னெடுத்துச் செல்வர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் மனிதாபிமானமற்ற முறையில் காஸாவில் அமுல்நடத்தப்பட்டு வரும் சட்டவிரோத முற்றுகையின் ஐந்தாம் வருட நினைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில், "காஸா மக்கள் மீது அநீதியான முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் முற்றுகை, பலஸ்தீனர்களின் அன்றாட சுமுக வாழ்வை முற்றாகச் சீர்குலைத்து, அவர்களின் இருப்பையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிபொருள், கட்டட நிர்மாணப் பொருட்கள், அடிப்படைப் பாவனைப் பொருட்கள் முதலான பெருவாரியான நுகர்வுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்காக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை மேற்படி ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் எதேச்சதிகார முற்றுகையின் விளைவால் காஸா மக்களிடையே போஷாக்கின்மை, சுகாதார சீர்கேடுகள், கல்விப் பின்னடைவு, வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி என்பன நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் ஸ்தம்பித நிலையை எட்டியுள்ளது" என காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment