Friday, June 3, 2011

மரியம்பிச்சை ராசியில்லாதவரா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தினமலர்!


னிதனின் மரணம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. மரணம் என்பது யாருக்கு எப்போது எந்த வடிவில் வரும் என்பதை எவரும் அறியமுடியாது. இறைவனின் இந்த நியதியின் படி மரியம்பிச்சை,அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில் சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக  உறுதிமொழி ஏற்க இருந்த நிலையில், விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இதையொட்டி 'ராசியில்லாத அமைச்சர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது தினமலர்.
 

அமைச்சராக பதவியேற்ற அற்ப நாளிலேயே ஆயுளை முடித்த மரியம்பிச்சையை ராசியில்லாதவர் என்று தினமலர் எழுதுவது, அவரது மரணத்தையே இழிவுபடுத்துவதாகும். அவரது மரணத்தால் துடித்துக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினரின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். மேலும் ஒருமனிதன் பதவியில் வீற்றிருக்கும் நாளின் எண்ணிக்கைதான் அவன் ராசியானவன் என்பதற்கும், ராசியில்லாதவன் என்பதற்கு அளவுகோலாக கொள்கிறதா தினமலர்? 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற பாடல் வரி போன்று,திருச்சி மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு மட்டும் அறிமுகமான மரியம்பிச்சை இன்று உலகம் முழுவதும்  வாழும் தமிழர்களின் மனதை நெகிழச்செய்து விட்டு  மறைந்தது தினமலரின் மூ[ம]ட  நம்பிக்கை கண்களுக்கு தெரியவில்லையா? 


எங்கே மரியம்பிச்சையை மட்டும் எழுதினால் அதிமுகவினர் கொந்தளித்து விடுவார்களோ என்ற பயத்தில் காலம் சென்ற  அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனையும், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2001ல், அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில்  பதவியிழந்த அய்யார் வாண்டையாரையும் சேர்த்து ராசியில்லாதவர்களாக காட்டி இழிவு படுத்துகிறது தினமலர். ராசிபலன் மீது தினமலருக்கு நம்பிக்கை இருக்கலாம் தவறில்லை. அந்த ராசியை இறந்தவர்கள் மீதும்   இருப்பவர்கள் மீதும் திணித்து இழிவுபடுத்தும் வேலையை  செய்வது பத்திரிக்கை தர்மமல்ல என்பதை தினமலர்புரிந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment