Tuesday, June 7, 2011

13 வயது பலஸ்தீன் சிறுமி கைது


நெகெவ் பாலைவனச் சிறைச்சாலையின் ஆக்கிரமிப்புக் காவற்படையினர் இன்று 13 வயதான பலஸ்தீன் சிறுமியைக் கைதுசெய்துள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் ஸல்ஃபித் பிரதேசத்திலிருந்து கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய தந்தையைச் சந்திப்பதற்காக வந்திருந்த போதே சிறுமி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காஸாவில் உள்ள பலஸ்தீன் கைதிகள் விவகார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஸமாஹ் முஸ்லிம் எனும் 13 வயதுடைய பலஸ்தீன் சிறுமி தன் தந்தைக்குக் கொடுக்கவென பல்வேறு பொருட்களை ரகசியமாக எடுத்துச்செல்ல முயன்றார் எனப் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு ஆக்கிரமிப்புக் காவலர்களால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புச் சிறைக் காவலர்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு போலியானது என்றும், சிறுமி எந்தப் பொருளையும் தன்னுடன் கொண்டு செல்லவில்லை என்றும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பலஸ்தீன் சிறைக் கைதிகளைப் பார்வையிட அவர்களின் குடும்பத்தவர்கள் செல்வதைத் தடுத்து நிறுத்துமுகமாகவே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் இத்தகைய பொய்வழக்குகளைச் சோடிக்க முனைவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கதறும் தாயின் முன்னிலையில் பயத்தால் கத்தியழும் 13 வயது அப்பாவிச் சிறுமியை விசாரணை செய்யும் போர்வையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவற்துறையினர் தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பீர் ஷபா இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வழக்குமன்றம் சிறுமியை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பலஸ்தீன் கைதிகள் விவகார அமைச்சகம் விசனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment