Sunday, June 12, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் 3வது குற்றப்பத்திரிக்கை-மேலும் சில புள்ளிகள் கைது?

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ விரைவில் 2வது துணைக் குற்றப்பத்திரிக்கையை (இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே இது 3வது குற்றப்பத்திரிக்கையாகும்) தாக்கல் செய்யவுள்ளது. இதில் மேலும் சில முக்கியப் புள்ளிகளை அது சேர்க்கவுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில முக்கிய நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், இரண்டு முக்கிய மிகப் பெரிய நிறுவனங்களின் அதிபர்களின் பெயர்கள் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறும் வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் இந்த துணைக் குற்றப்பத்திரிக்க்கையை சிபிஐ தாக்கல் செய்யும்.

சில முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிரான ஆதாரங்களை நாங்கள் திரட்டியுள்ளோம். இவர்களிடம் மே மாதத்தில் விசாரணை நடந்தது.

மேலும் புதிய குற்றப்பத்திரிக்கையில் மேலும் பல நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெறவுள்ளன என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. ஏப்ரல் 25ம் தேதி 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முதல் குற்றப்பத்திரிக்கையில் ராசாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. 2வது குற்றப்பத்திரிக்கையில், கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறையான திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் தற்போது 3வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தயார் செய்துள்ளது. இதில் சிக்கப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment