Sunday, June 19, 2011

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஆளுநர் பர்னாலா

சென்னை: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது ஐந்து ஆண்டுப் பதவிக்காலத்தை இன்றுடன் நிறைவு செய்கிறார். அடுத்து விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்தவர் பர்னாலா. 1990ம் ஆண்டு முதல் முறையாக தமிழக ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். ஆனால் திமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட வற்புறுத்தப்பட்டதால் இவர் மாற்றப்பட்டு பீகாருக்கு போனார். பின்னர் அரசியலில் மீண்டும் குதித்த பர்னாலா, எம்.பியாகி மத்திய அமைச்சராகவும் செயல்பட்டார்.

பின்னர் மீண்டும் ஆளுநர் பதவிக்குத் திரும்பினார். உத்தராஞ்சல் மாநிலம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு ஆந்திராவுக்கு வந்தார். இடையில் 2004ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மீண்டும் தமிழக ஆளுநரானார். 



பின்னர் 2006ம் ஆண்டு மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இன்று அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோதெல்லாம் ஆளுநராக இருந்தவர் என்ற பெருமை பர்னாலாவுக்கு உண்டு.

இன்றுடன் விடை பெறும் பர்னாலா மீண்டும் இப்பதவியில் தொடர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. புதிய ஆளுநர் விரைவில் அறிவிக்கப்படக் கூடும். இருப்பினும் இதுவரை அடுத்த ஆளுநர் யார் என்பதை மத்திய அரசு அறிவிக்காமல் உள்ளது.

புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆந்திரா அல்லது கர்நாடக ஆளுநர்கள் வசம் தமிழக ஆளுநர் பதவி தற்காலிகமாக ஒப்படைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழார்வம் மிக்க பர்னாலா

ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பர்னாலா தமிழ் ஆர்வம் மிக்கவர். தமிழில் பேசுவதை விரும்புபவர். தமிழைக் கற்றுக் கொண்டனர். தமிழகத்தின் மீது தனி அன்பு வைத்திருந்த பர்னாலா, தமிழகத்தில் பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வமும், விருப்பம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment