Wednesday, June 8, 2011

சென்னையிலிருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து 23 பேர் கருகி பலி

வேலூர்: சென்னையிலிருந்து திருப்பூருக்குச் சென்ற கேபிஎன் ஆம்னி பேருந்து, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பாலத்தின் மீது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 23 பேர் உயிரோடு கருகி உருக்குலைந்து போய் பரிதாபமாக பலியானார்கள்.

பேருந்தின் டிரைவர் மட்டும் உயிருடன் தப்பினார். அதேபோல பயணிகளில் ஒருவர் மட்டும் உயிருடன் தப்பியுள்ளார். மற்ற அனைவருமே பலியாகி எலும்புக் கூடுகளாக காட்சி அளித்தது பார்க்கவே படு கோரமாக இருந்தது.


உயிரிழந்த 23 பேரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகிப் போய் விட்டனர்.

நேற்று இரவு சென்னையிலிருந்து இந்தப் பேருந்து திருப்பூருக்குக் கிளம்பியது. இரவு 11.30 மணியளவில் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்திற்கு அருகே அவலூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த லாரி மீது பேருந்து திடீரென மோதியது. இதனால் தடுமாறிய பேருந்து, சாலையோரம் உள்ள பாலத்தின் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.

இதைத் தொடர்ந்து பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்ததால் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.


பேருந்தின் ஒரு கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாலும், அதை உடைத்துக் கொண்டு வர பயணிகளுக்கு முடியாததாலும் அனைவரும் தீயில் சிக்கி கதறி அழுதனர்.

இந்த நிலையில் ஆம்னி பஸ் ஒன்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்த அந்த சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. அக்கம் பக்கத்து மக்களும் ஓடி வந்தனர். போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும், ஆம்புன்லன்ஸ்களுக்கும் தகவல் போனது.

அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் பேருந்தின் டிரைவர் மற்றும் ஒரு பயணியை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற அனைவரும் எரிந்து கருகிப் போய் விட்டனர்.

பேருந்தின் டிரைவர் நாகராஜ் மட்டும் எப்படியோ உயிர் தப்பி விட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல பயணிகளில் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவரும் உயிர் தப்பினார். அதேசமயம் இவருடைய மனைவி ஸ்மிதா விபத்தில் உயிரிழந்து விட்டார். இவர்கள் கடைசி இருக்கையில் பயணித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சின்னையா ஆகியோர் விரைந்து வந்தனர்.

மீட்பு நடவடிக்கைகளை அங்கேயே இருந்து முடுக்கி விட்டனர். பேருந்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியை கூடவே இருந்து கண்காணித்தனர். அமைச்சர்களும், பொதுமக்களும் சேர்ந்து உடல்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த சோகச் சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment