Thursday, October 17, 2013

ம.பி. : பா.ஜ.க. அரசின் முறைகேட்டைக் கண்டித்து பத்திரிகையாளர் தற்கொலை!

போபால்: மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசின் அதிகாரிகளின் முறைகேடுகளைக் கண்டித்து, போபாலில் தற்கொலைக்கு முயன்ற பத்திரிகையாளர் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தார்.

போபாலில் வாரப் பத்திரிகை நடத்தி வந்தவர் ராஜேந்திர குமார். மத்தியப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் பலர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான போலி சாதிச் சான்றிதழ்களை அளித்துப் பணியில் சேர்ந்ததாகப் புகார் எழுந்தது.


இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைச் சேகரித்த பத்திரிகையாளர் ராஜேந்திர குமார், போலி சாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரி, அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், மத்தியப் பிரதேச அரசு தலைமைச் செயலகம் முன் செவ்வாய்க்கிழமை அவர் விஷம் குடித்தார். முன்னதாக, தனது சாவுக்கு அதிகாரிகளின் மிரட்டலே காரணம் எனத் தெரிவித்து, தனது செல்ஃபோன் மூலமாக சக பத்திரிகையாளர்களுக்கும், போலீஸாருக்கும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். மத்தியப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் கூறுகையில், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மிகவும் துயரகரமானது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாநிலஅரசு உத்தரவிட வேண்டும். அதேசமயம், அவரது தற்கொலைக்குக் காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment