Friday, October 25, 2013

இலங்கை காமன் வெல்த் மாநாட்டை தடுத்து நிறுத்து! SDPI!

அக் 25/2013: ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குப் பிறகு, சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றிற்கு எதிராக  தற்போதும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் இலங்கை சென்று ஆய்வு செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின்  தலைவர் நவநீதம் பிள்ளையும்  இதைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். 




இந்நிலையில் காமன்வெல்த்  மாநாடு  வரும்  நவம்பரில் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது காமன்வெல்த்தின் அடிப்படைகளுக்கே  எதிரானதாகும். காமன்வெல்த் மாநாடு  இலங்கையில் நடைபெறுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கனடா அந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

கனடாவை விட தமிழர்களின் பிரச்னையில் அதிகக் கடைமையுள்ள இந்தியா காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது எனக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.மத்திய அரசின்  எதிர்ப்பையும் மீறி இம்மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரிக்கிறது. இக்கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த 10ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் தலைமையில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆனால் மத்திய அரசு இன்னும் இப்பிரச்னையில் தமிழர்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.

எனவே இந்தியா காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்ற 28ஆம் தேதி டெல்லியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் தலைமையில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் சார்பாக மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக் ஆகிய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment