Thursday, October 17, 2013

சர்ச்சைக்குரிய கடிதம்: உ.பி. உள்துறை முதன்மைச் செயலாளர் இடமாற்றம்!

லக்னோ: ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய கடிதம் அனுப்பிய விவகாரத்தில், உத்தரப் பிரதேச உள்துறை முதன்மைச் செயலர் ஆர்.எம். ஸ்ரீவஸ்தவா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்குப் பதிலாக அனீல் குமார் குப்தா புதிய உள்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.
ஆர்.எம். ஸ்ரீவஸ்தவாவை பணியிட மாற்றம் செய்ததற்கான காரணத்தை அந்த மாநில அரசு தெரிவிக்கவில்லை. இருப்பினும், ராமர் கோயில் தொடர்பான சர்ச்சைக்குரிய கடிதத்தால்தான் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான நாடாளுமன்றச் சட்டம் குறித்து விவாதிக்க அக்டோபர் 14-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என, உயர் அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச உள்துறைச் செயலர் சர்வேஷ் சந்திரமிஸ்ரா அக்டோபர் 9-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து, உள்துறை செயலர் சர்வேஷ் சந்திர மிஸ்ரா பணியிட மாற்றம் செய்யப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் உள்துறையில் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய பிரேம்குமார் பாண்டேவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment