Tuesday, October 29, 2013

தீவிரவாதி என்று குற்றம் சாட்டி போலீஸ் துன்புறுத்திய கஷ்மீர் இளைஞர்: நீதிமன்றம் விடுதலை!

குமுளி: ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்து துன்புறுத்திய கஷ்மீர் இளைஞரை, குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
போலி ஆவணம் உபயோகித்து சிம் கார்டு வாங்கினார் என்று குற்றம் சாட்டி கஷ்மீரைச் சார்ந்த இளைஞரையும், கடை உரிமையாளரையும் கேரள போலீஸ் கைது செய்தது.





2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து கஷ்மீரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் அல்தாஃப் அஹ்மத் கானுக்கு (வயது 32) துயரம் துவங்கியது.
பத்தாம் வகுப்பு பயிலும்போது போராளிகளுக்காக ஆயுதம் கடத்தினார் என்று குற்றம் சாட்டி ஜம்மு போலீஸ் அல்தாஃபை கைது செய்து 2 ஆண்டுகள் சிறையில் அடைத்திருந்தது. பின்னர் ஸ்ரீநகர் நீதிமன்றம் அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்திருந்தது.

பின்னர் அமைதியான வாழ்க்கை தேடி குமுளியில்  உள்ள தனது உறவினரின் வியாபார நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் அல்தாஃப். இதனிடையே பாஸ்போர்ட்டுக்காக அளித்த விண்ணப்பம் குறித்த விரிவான விசாரணைக்கு கஷ்மீருக்கு அனுப்பப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்ற காரணத்தால் அல்தாஃப் மீது தீவிரவாத முத்திரை குத்தி குமுளியில் கஷ்மீரி கைத்தறி விற்பனை நிறுவனத்தில் இருந்து போலீஸ் கைது செய்தது.


தீவிரவாதச் செயல்களுக்காக போலி அடையாள ஆவணங்களைத் தயாரித்து கேரளாவில் தலைமறைவாக இருந்தார் என்று அல்தாஃப் மீது கேரள போலீஸ் வழக்கு பதிவு செய்தது. கொடிய தீவிரவாதி போலவே அல்தாஃப் மீதான வழக்கை கேரள போலீஸ் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் கஷ்மீர் முதல்வர் தலையிட்டு அல்தாஃப் மீது தீவிரவாத வழக்குகள் ஒன்றும் இல்லை என்று கூறி ஸ்ரீநகர் போலீஸ் அறிக்கை அளித்தது.
இதனால் 45 தினங்கள் கழித்து அல்தாஃபிற்கு ஜாமீன் கிடைத்தது. தீவிரவாத வழக்கு தொடர்பாக குமுளி போலீஸ் பதிவு செய்த வழக்கு நீடிக்காது என்பதை கண்டறிந்து நீதிமன்றம் அல்தாஃப் மற்றும் சிம் கார்டு விற்ற கடை உரிமையாளர் ஷாகுல் ஹமீது ஆகியோரை விடுவித்தது.
செய்யாத குற்றத்திற்காக தீவிரவாத முத்திரை குத்தப்பட்டதால் தனது வியாபாரத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ஷாகுல் ஹமீது கூறுகிறார். நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுவித்த போதும் பல வேளைகளிலும் போலீஸ் தன்னை தேடி வருவதாகவும், இது தன்னை மன ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் அல்தாஃப் கூறுகிறார்.

No comments:

Post a Comment