Thursday, October 24, 2013

மோடியைப் பிரதமராக்கி மீண்டும் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் வரவேண்டுமா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

சென்னை, அக்.23- குஜராத்தில் பாடத் திட்டத்தில் மனுதர்மம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், மனுதர்மப்படி ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்தான் வரும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் நேற்று இரு பெரும் ஆபத்துகள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எனும் தலைப்பில், திராவிடர் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:



ஜாதியின் பெயரால் கூட்டணி, மதத்தின் பெய ரால் அணிவகுப்பு என்று சிலர் புறப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் எதிர்த்துதான் இந்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் - வளர்ச்சி அடைந்துள்ளனர். கல்வி, உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
கடந்தகால வரலாறு என்ன?
நமது கடந்தகால வரலாறு, இன்று 18 வயது நிறைந்த இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்க லாம்.
இப்பொழுது நாம் பெற்றுள்ள வளர்ச்சி முன்பிருந்தே பெற்று வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது உண் மையல்ல என்பதை நாம் புரிய வைக்கவேண்டும் - பழைய வரலாற்றை எடுத்துக்கூற வேண்டும்.
கொஞ்சம் நாம் அயர்ந்தால்...
கொஞ்சம் நாம் அயர்ந்தால், ஜாதியைச் சொல்லி, மதத்தைக் காட்டி நம்மை மீண்டும் பழைய காலத் துக்கே துரத்தி விடுவார்கள்;  மீண்டும் கோவணம் கட்டிக்கொண்டுதான் கிடக்கவேண்டும்.
இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லி, ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்தச் சிறப்புக் கூட்டம். தந்தை பெரியார் கேட்டாரே - சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? என்று கேட் டாரே - சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்று தானே பொருள்?
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!
அதனால் அல்லவா சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டடி என்ற முழக்கத்தை தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் கொடுத்தனர். இந்து மதத்தில் ஏணிப்படி ஜாதி அமைப்பு முறை.
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற உயர்வு - தாழ்வு அடுக்குமுறை - பிறப்பின் அடிப்படையில் இருக்கிறதே 5 ஆவது இடத்தில் பஞ்சமரும் - 6 ஆவது இடத்தில் எல்லா ஜாதிகளை யும் சேர்ந்த பெண்களும் இருக்கிறார்களே!
அதிகமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை!
இதில் யார் அதிகமாக ஒடுக்கப்பட்டார்களோ, உரிமைகள் மறுக்கப்பட்டனவோ, அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதானே சமூகநீதி.
இதற்காக அரும்பாடுபட்டு, போராடி இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்தால், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும், மறந்துவிட்டு திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்து கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடையாளம் காணவேண்டாமா?
நூறு ஆண்டுகால சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் ஒரு தாழ்த்தப் பட்டவர் நீதிபதியாக வர முடிய வில்லையே, என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பியதற்குப் பிறகுதானே முதலமைச்சர் கலைஞர் அவர்கள்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரதராசன் அவர்களைத் தேடிப் பிடித்து, அந்தப் பதவியில் அமர்த்தி னார்.
பொது எதிரி யார்?
தாழ்த்தப்பட்ட மக்களும், பிற் படுத்தப்பட்ட மக்களும் ஒன்றி ணைந்து பொது எதிரிகளை அடை யாளம்கண்டு, இன்னும் பெறவேண் டிய உரிமைகளை ஈட்டுவதுதான் நம்முன் உள்ள பிரச்சினை.
இந்த இயக்கத்துக்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி, சக்கிலியன் கட்சி என்றுதான் பெயர்.
அதை நாங்கள் இழிவாகக் கருத வில்லை; பெருமையாகத்தான் கருதினோம் - இன்றும் கருதுகிறோம்.
அடையாளம் காண்பீர்!
யாரை எதிர்த்தோம்? எப்படி உரிமைகளைப் பெற்றோம்? என்பதை யெல்லாம் மறந்துவிட்டு, பார்ப் பனர்களைச் சேர்த்துக்கொண்டு, தாழ்த்தப்பட்டவர்களை எதிர்த்து அணிதிரட்டுகிறார்கள் என்றால், அவர்களை அடையாளம் காண வேண்டாமா?
சமூகநீதிக்கு ஆதரவானவர்களா பார்ப்பனர்கள்? அவர்களைச் சேர்த் துக் கொண்டால் அதன்பின் விளைவு என்ன? இட ஒதுக்கீடே கூடாது என்ற நிலைக்குத்தானே தள்ளப் படுவீர்கள் - எச்சரிக்கை! எச் சரிக்கை!!
மதவாதக் கூட்டணி!
மற்றொரு அணி - மதவாதக் கூட் டணி - மனுவாதக் கூட்டணி புறப் பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் சொன்னால், மோடியின் ஆட்சியில் குஜராத்தில், மனுதர்மம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? மோடி பிரதமரானால் ஒரு குலத்துக் கொரு நீதி, சூத்திரர்களுக்கு, பஞ்சமர் களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமா?
மீண்டும் குலக்கல்வித் திட்டமா?

தமிழ்நாட்டில் ராஜாஜி  குலக் கல்வித் திட்டம் எதற்குக் கொண்டு வந்தார்? பார்ப்பனர் அல்லாதார் - சூத்திரர்களின் கல்விக் கண்ணைக் குத்துவதற்காகத்தானே!
குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவியைவிட்டு ஓடும் படிச் செய்தோம் - 1952 மீண்டும் திரும்புகிறதா?
மோடி பிரதமர் ஆனால், அந்தக் குலக்கல்வித் திட்டம் வேறு பெயரில் வரும் அவ்வளவுதான்.
மோடியின் குஜராத்தில் முஸ்லிம் ஒருவர்கூட சட்டமன்ற உறுப்பினர் கிடையாது!
குஜராத் சட்டமன்றத்தில் ஒரே ஒரு முஸ் லிம்கூடக் கிடையாது என்று பெரு மையாகச் சொல்லுகிறார்களே, இது பெருமைக்கு உரியதுதானா?
உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா. அம்மக்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா?
குடிமக்கள் உரிமையும் இன்றி அவர்கள் வாழவேண்டும் - முஸ்லிம் கள், ராமனைக் கும்பிடவேண்டும்; கிறித்தவர்கள் கிருஷ்ணனைக் கும்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கோல்வால்கர் சொல்ல வில்லையா?
மோடியை முன்னிறுத்தியது ஆர்.எஸ்.எஸ்.தானே! மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்புக் கூறியது?
பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட் டோரைக் கற்பழிக்க மாட்டார்களாம் - சொன்னது நீதிமன்றம்
பன்வாரி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். அதற்காகப் பாடுபட்ட  அந்தப் பெண்ணை உயர்ஜாதி பார்ப் பனர்கள் பாலியல் வன்முறை செய் தனர்.
நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்ன தீர்ப்பு எழுதினார்கள் தெரியுமா? ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிராம ணர் எப்படி கற்பழித்திருக்க முடியும் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தார்களே!
கனவு காணவேண்டாம்!
ஆட்சியில் சில குறைபாடுகள் இருக்கின்றன - விலைவாசி உயர்வு என்கிற சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். சாமியார் கண்ட தங்கச் சுரங்கக் கனவு என்னவாயிற்று?

பன்னாட்டு முதலாளிகள் பின் பலமாக இருக்கின்றனர். உயர்ஜாதி ஊடகங்கள் பக்க பலமாக இருக் கின்றன என்ற துணிச்சல் அவர்க ளுக்கு - ஆனால், உண்மை நிலை என்ன?
காஷ்மீர், மேற்கு வங்காளம், கேரளா, எடியூரப்பா உபயத்தால் கருநாடகா - தமிழ்நாடு முதலிய இடங்களில் இவர்களால் கால் பதிக்க முடியுமா? தமிழ்நாட்டை நினைத் துத்தான் பார்க்க முடியுமா?
இந்த நிலையிலே, எப்படி ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள்? என்று கேட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றி னார். (உரை நாளை வெளிவரும்).
தொடக்கத்தில் கழக அமைப்புச் செய லாளர் வெ. ஞான சேகரன் வரவேற் புரையாற்றினார்.
6.30 மணிக்குத் தொடங்கிய சிறப்புக் கூட்டம் 8.50 மணியளவில் நிறைவுற்றது.
கூட்டத்தில் தொடக்கத்தில் உடுமலை பேராசிரியர் என்.சுப்பிர மணியம், பகுத்தறிவாளர்  தோழர் புலவர் பா.வீரமணி அவர்களின் குடும்பத்தில் மூவர் மறைவுற்றமைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது - அனைவரும் எழுந்து நின்று மரி யாதை செலுத்தினர்.
நன்றி:விடுதலை 

No comments:

Post a Comment