Tuesday, October 29, 2013

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தகராறு!!

முத்துப்பேட்டை, அக்டோபர் 29: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களை பெரும்பாலான தனியார்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவர் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் அயூப்கான். இவர் அதிமுக வார்டு நிர்வாகியாக உள்ளார். அயூப்கான் பேரூராட்சி அலுவலகத்தில் சென்ற வாரம் அதே பகுதியைச் சேர்ந்த சேக்கமரைக்காயர் மகன் சாகிப் மரைக்காயர் பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பேரூராட்சி செயல் அலவலார் சித்தி விநாயகமூர்த்தியிடம் புகார் கொடுத்திருந்தார்.





 உடன் செயல் அலுவலர் சம்மந்தப்பட்ட சாகிப் மரைக்காயருக்கு விளக்கம் கேட்டு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டன. இந்த நிலையில் விடுப்பில் சென்றிருந்த செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி நேற்று அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம் அளிப்பதற்காக சாகிப் மரைக்காயரும் அவரது நண்பர் நவாஸ்கானும் சென்று செயல் அலுவலரிடம் விபரங்களை கூறினர். அதில் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த செயல் அலவலர் புகார் கொடுத்த அயூப்கானுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சாகிப் மரைக்காயருக்கும் அதிமுக நிர்வாகி அயூப்கானுக்கும் தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். 


பின்னர் அலுவலம் வாசலில் நின்று சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி வளாகம் பெரும் பரபரப்பானது. தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகம் எதிரே நின்று வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலிசார் பேரூராட்சி அலுவலம் வந்து தகராறில் ஈடுபட்டவர்களை கலைத்துவிட்டார். இந்த நிலையில் சாகிப் மரைக்காயர் அதிமுக நிர்வாகி அயூப்கான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

source:muthupetexpress

No comments:

Post a Comment