Wednesday, October 9, 2013

முஸஃபர்நகர் கலவரம்: உ.பி. அரசு கடுமையான தவறை இழைத்துள்ளது! – சிறுபான்மை கமிஷன்

புதுடெல்லி: 50க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்ட உ.பி. மாநிலம் முஸஃபர்நகர் கலவரத்தை கையாண்டதில் மாநில அரசு கடுமையான தவறை இழைத்துள்ளது என்று தேசிய சிறுபான்மை கமிஷனின் அறிக்கை கூறுகிறது.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வதந்திகளும், தவறான செய்திகளும் பரப்புவதை தடுப்பதற்கு உ.பி. மாநில போலீசுக்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலவரத்தை தடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை சிறுபான்மை கமிஷன் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜஹத் ஹபீபுல்லாஹ், உறுப்பினர்களான கெ.என். தாருவாலா, டாக்டர் அஜைப் சிங், டி.என். ஸாஹு ஆகியோர் அடங்கிய குழுவினர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸஃபர்நகர் மாவட்டத்தின் பகுதிகளை பார்வையிட்டனர்.
கலவரத்தை அடக்குவதில் அரசுத் தரப்பில் ஏற்பட்ட தவறு பெரியதொரு கலவரத்திற்கு வழி வகுத்ததாக சிறுபான்மை கமிஷனின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கவால் கிராமத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட், மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோரை இடம் மாற்றியது சட்டம்-ஒழுங்கு சூழலை கடுமையாக பாதித்தது.
நங்கல மண்டோரில் நடந்த மஹா பஞ்சாயத்திற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. மஹா பஞ்சாயத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்களையும் சிறுபான்மைக் கமிஷன் விமர்சித்துள்ளது.
போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாக ஒரு புறம் ஜாட்டுகள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று முஸ்லிம்கள் கூறுகின்றனர். இது போலீஸின் தவறைக் காட்டுகிறது.
கலவரம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கமிஷன் மற்றும் போலீஸ் குழுவிற்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை அளிக்க வேண்டும் என்று சிறுபான்மைக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.
முஸஃபர்நகர் மற்றும் ஷாம்லியில் உள்ள அகதிகள் முகாம்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருப்பதாக சிறுபான்மைக் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

No comments:

Post a Comment