Wednesday, October 23, 2013

உ.பி கலவரம் - சூத்திரதாரிகளும் பலன் அடைந்தவர்களும்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகரில் நடைபெற்ற கலவரத்தில் இது வரை 48க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
10,000 நபர்கள் அகதி முகாம்களுக்கு குடியேறியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அவ்வப்போது தளர்த்தப்பட்டாலும் எந்நேரமும் கலவரம் வெடிக்கும் சூழலே நிலவுகிறது.

இக்கலவரம் பற்றி கருத்து கூறிய உள்துறை அமைச்சர் ஷிண்டே முசாபர்நகர்கலவரத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என்று கூறினார். மேலும்  நாடாளுமன்ற தேர்தலுக்குள் பல்வேறு கலவரங்களை எதிர்பார்க்கலாம் என்றும் அச்சம் தெரிவித்திருந்தார். உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவும் இதே தொனியில் கருத்து கூறியிருந்தார்.
ஒரு இந்து பெண்ணை முஸ்லீம் வாலிபர் சீண்டியதால் அம்முஸ்லீம் வாலிபரை அப்பெண்ணின் சகோதரர்கள் கொன்றதாகவும் அதற்கு பதிலடியாக அச்சகோதரர்கள் கொல்லப்பட்டதே இக்கலவரத்தின் வித்தாக கூறப்படுகிறது. ஆனால் ஆகஸ்டு 27ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் இத்துணை நாட்கள் கழித்து 40 கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியதின் பின்னணி ஆராயப்பட வேண்டிய ஒன்று.

மூன்று கொலைகளோடு முடிந்திருக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்னை ஒரு வகுப்பு கலவரமாக மாற்றப்படும் சூழலின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்தாலும் பாஜக மற்றும் சமாஜ்வாதியின் ஓட்டு அரசியலே பிரதானமாக கூறப்படுகிறது.
பீஹாரிலும் உத்தரபிரதேசத்திலும் முஸ்லீம்கள் லாலுவுக்கும், முலாயமுக்கும் ஒட்டு மொத்தமாக தங்கள ஆதரவை வழங்கினர். அதற்கு பிரதியுபகாரமாக முஸ்லீம்களின் பாதுகாப்புக்கு அவர்களின் ஆட்சியில் ஒப்பீட்டளவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதே பாணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்து முஸ்லீம் மோதலை கூர்மைப்படுத்துவதன் மூலம் சமாஜ்வாதியும், பாஜகவும் பலன் அடைய திட்டமிட்டுள்ளன என்றே பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
முல்லா முலாயம் என்று கூறப்படும் அளவு முஸ்லீம்களோடு நெருக்கமாக தன்னை காட்டி கொண்டாலும் இக்கலவரத்தை தடுக்க நினைத்திருந்தால் அகிலேஷ் அரசு தடுத்திருக்கலாம் என்று கோபப்படும் சிறுபான்மை அமைப்புகள் கீழ்காணும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
  1. ஆகஸ்டு 27 சம்பவம் நடைபெற்ற உடனே ஏன் மாநில அரசு இரு தரப்பு குற்றவாளிகளையும் சிறையில் அடைத்து உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை?
  2. ஆகஸ்டு 31 அன்று ஜாட்கள் மஹா பஞ்சாயத்தை கூட்டிய போது ஏன் அதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?
  3. கூட்டம் கூட்ட தடை இருந்த நிலையில் செப்டம்பர் 7 அன்று ஜாட்களின் பஞ்சாயத்து நடக்க ஏன் அரசு அனுமதித்தது?
  4. இந்துக்கள் ஆயுதங்களோடு செல்லவும் கலவரத்தை தூண்டும் பேச்சுகள் பேசப்படவும் ஏன் அரசு அனுமதித்தது?
  5. கூட்டங்கள் கலவரத்தை தூண்டலாம் எனும் உளவுதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கை ஏன் கண்டு கொள்ளப்படவில்லை?
  6. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதேன்?
  7. முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடைபெற்ற போது ஏன் முஸ்லீம் இளைஞர்கள் எக்காரணமுமில்லாமல் கைது செய்யப்பட்டார்கள்?
  8.  
முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது தங்களை இரட்சகராக காட்டி கொண்டால் முஸ்லீம்களின் ஓட்டுகள் தங்களுக்கு விழும் என்பதாலேயே அகிலேஷ் அரசு கலவரம் வருவதை கட்டுப்படுத்தவில்லை என்றும் ஒரு கட்டத்தில் அரசின் கையை மீறி கலவரம் சென்று விட்டதால் அரசு விழி பிதுங்கி நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இக்கலவரத்தில் பலன் அடைந்தது சந்தேகமின்றி பாஜகவே. பாபர் மசூதி கலவர சமயத்தில் கூட ஜாட் இனத்தவர்கள் பாஜக பக்கம் சாயாமல் அஜித் சிங் மற்றும் சமாஜ்வாதி பக்கமே இருந்தனர். ஆனால் இக்கலவரத்தை வாய்ப்பாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிட்டு வன்முறையை தூண்டும் பேச்சுக்களை தூண்டி இந்துக்களின் பாதுகாவலர்களாய் தங்களை காட்டும் முயற்சியில் பாஜக  ஒரளவு வென்று விட்டது என்றே சொல்லலாம்.

உத்தரபிரதேசத்தில் இது வரை சமாஜ்வாதி வென்றதற்கு முக்கிய காரணமே ஜாட் மற்றும் முஸ்லீம் ஓட்டு வங்கியே. ஆனால் முஸ்லீம் ஒட்டு வங்கியை வலுப்படுத்துவதாக நினைத்து சமாஜ்வாதி செய்த முயற்சிகள் ஜாட் ஓட்டை பாஜக பக்கம் திருப்பி விட்டுள்ளது. இக்கலவரத்தால் இந்துக்களோடு தற்போது முஸ்லீம்களும் சமாஜ்வாதி அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்.
சமாஜ்வாதி அரசின் கையாலாகாத்தனம் மற்றும் தவறான ஓட்டு வங்கி கணிப்பீடால் சமாஜ்வாதி மீதான ஜாட்களின் அதிருப்தியை பாஜகவும் முஸ்லீம்களின் அதிருப்தியை பகுஜன் சமாஜும் காங்கிரஸூம் பங்கு போட்டு கொள்ளும். இதை விட கவலையளிக்கும் விஷயம், பாபர் மசூதி இடிப்பின் போது கூட ஒற்றுமையாய் வாழ்ந்த ஜாட் மற்றும் முஸ்லீம் மக்களின் தற்போதைய நிலை. அகதிகள் முகாம்களிலும் அருகிலுள்ள மதராசாக்களிலும் தஞ்சம் புகுந்திருக்கும் 10,000 முஸ்லீம்களும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பும் சூழல் இல்லாததது, உத்தரபிரதேசத்தின் சமூக சூழலை மோசமான காலகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்பது மட்டும் கசப்பான உண்மை.

No comments:

Post a Comment