Thursday, October 17, 2013

மோடியை ஆதரிக்க மாட்டேன்! – நவீன் பட்நாயக்

புவனேஷ்வர்: பா.ஜ.க.வின் நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

இது பா.ஜ.க.வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஐபிஎன்7 தொலைக்காட்சிக்கு நவீன் பட்நாயக் அளித்த பேட்டியில், “குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராவதை, என்னைப் போலவே பலரும் விரும்பவில்லை. நான் ஏன் விரும்பவில்லை என்பது உங்களுக்கே (பத்திரிகையாளர்கள்) தெரியும். மோடியின் வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதனை நான் கூற விரும்பவில்லை. மோடி பிரதமராவதற்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலுக்குப் பிறகும் மோடியுடன் எவ்விதக் கூட்டணியும் இல்லை” என்றார்.


“காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிப்பீர்களா?” எனக் கேட்டபோது, “காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் சம அளவில் விலகியிருக்கவே விரும்புகிறேன்” என்றார் பட்நாயக்.

“பிரதமராக நீங்கள் முயற்சிப்பீர்களா?” என்று கேட்டபோது, “ஒடிசாவில் நான் ஆற்றி வரும் பணியே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிலளித்தார்.

நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் இதற்கு முன்பு பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அவர் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரின் இந்தப் பேட்டி, அந்த எதிர்பார்ப்பை தகர்த்து விட்டது. சமீபத்தில் பா.ஜ.க.வின் ஒடிசா மாநிலப் பிரிவைச் சேர்ந்த தலைவர்கள், மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் எவ்வாறு (எந்த அணியில் இடம் பெறப் போகிறது) எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நவீன் பட்நாயக் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment