Saturday, October 26, 2013

மோடி மாயையில் சிக்கியுள்ள ம தி மு க வும் இதர சிறுகட்சிகளும்!

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவுகளாலும்  காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் அடுத்தடுத்த ஊழல்களாலும்,
எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் சிறந்த ஒரு மாற்றம் ஏற்படும் என்ற கருத்துருவாக்கம் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.




சந்தடிச்சாக்கில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு, இக்கருத்து அனைத்து ஊடகங்களாலும் திரும்பத் திரும்பத் திணிக்கப்படுகிறது. சாமான்யர்கள் மட்டுமின்றிச் சிறுகட்சிகளும் மோடி மாயையில் வீழ்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் வகையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது. நாட்டின் தற்போதையை பிரச்சினைகள் அனைத்தையும் பாஜக தீர்க்கும் என்று ஆளாளுக்கு ஆருடம் சொல்லிக் கூட்டணிக்கு ஆள் பிடிக்கின்றனர்.

தமிழகத்தில் அதிமுக-திமுக தவிர்த்து ஆட்சியமைக்கும் அளவில் வலிமையான  மாற்றுக் கட்சிகள் இல்லை. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் 2016 இல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவ்வப்போது சொல்லி வந்தாலும் ஏதேனுமொரு திராவிடக் கட்சியுடன் மாறி மாறிக் கூட்டணி அமைத்தே தேர்தலை எதிர்கொள்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளும் அவ்வாறே. காங்கிரஸில் நிலவும் கோஷ்டிப் பூசல்களால் திமுகவுடன் ஒட்டிக் கொண்டு மாநிலத்திலும் காங்கிரஸுடன் ஒட்டிக் கொண்டு திமுக மத்தியிலும் காலம் தள்ள வேண்டிய நிலை.


கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-அதிமுக இடையே திடீர் கூட்டணி ஏற்பட்டதால் கழற்றி விடப்பட்ட மதிமுக, தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நின்றது. இதனால் சோர்வடைந்துள்ள மதிமுக தொண்டர்களை அவ்வப்போது நடைப்பயணம் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் தக்கவைத்துள்ள வைகோ, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து ஓரிரு இடங்களைப் பெற்றுப் போட்டியிடலாம் என்று காய் நகர்த்தி வருகிறார்.

தமிழருவி மணியன் போன்றோர் பாஜக-தேமுதிக-மதிமுக கூட்டணியை வலியுறுத்திப் பேசி வருகின்றனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இல.கணேசன், "மோடி என்றாலே அவரது ஊழலற்ற, நிர்வாகத் திறனே நினைவுக்கு வருகிறது. அது போன்ற ஆட்சியை மத்தியிலும் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மக்களும் மோடி பிரதமராவதையே விரும்புகின்றனர்" என்றதோடு பாஜக கூட்டணியில் தேமுதிக மற்றும் மதிமுக வருவதையும் வரவேற்றுள்ளார்.
 

மோடி என்றாலே மக்களுக்கு உடனடியாக நினைவில் வருவது குஜராத் இனப்படுகொலைகளே என்பது இல.கணேசனுக்குத் தெரியவில்லையோ என்னவோ! ஆனால், மதிமுக தலைவர் வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் மோடியின் பராக்கிரமங்கள் நன்கு தெரிந்திருக்கும். திமுக-அதிமுக கட்சிகளை விரும்பாத சிறுபான்மை வாக்காளர்கள் இவ்விரு கட்சிகளிலும் கணிசமாக உள்ளனர். இந்நிலையில், ஓரிரு தொகுதிகளுக்கு ஆசைப்பட்டு பாஜக கூட்டணியில் இணைந்தால் வாக்காளர்கள் பாமகவைக் கைகழுவியது போல் இவர்களையும் கைகழுவுவர் என்பது இவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

தனித்துப் போட்டியிட்டுக் கணிசமான உறுப்பினர்களைப் பெற்றால் மத்தியில் எந்தக்கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் தமது தயவு தேவைப்படும். அதை வைத்து நீண்டகால தலைவலியாக இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெறலாம் என்ற திட்டத்துடன் இருக்கும் அதிமுக, கடைசி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மதிமுகவும், தேமுதிகவும் பாஜகவில் வேண்டா விருந்தாளியாகவே இருக்க முடியும்.

மேலும், அதிமுகவிடம் சூடுபட்ட புண் பசுமையாக இருக்கும் போது, இவ்விரு கட்சிகளும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கவே முடியாது.  மோடி மாயையில் சிக்கி எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச சிறுபான்மை மற்றும் நடுநிலை வாக்காளர்களை தேமுதிக, மதிமுக கட்சிகள் இழக்க விரும்பா என்றே நம்பலாம். எனினும், பாஜகவுடன் கூட்டணி என்பதில் மதிமுக உறுதியாக இருந்தால் அனேகமாக அதன் இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும்.

இலங்கையுடன் நட்பு பாராட்டுவதிலும், சிங்களவர்களை ராமரின் வாரிசுகளாகக் கருதுவதிலும் காங்கிரஸை விட பாஜக எவ்வகையிலும் குறைந்ததல்ல. ஈழப்பிரச்சினையை முன் வைத்துத் தமிழகத்தில் அரசியல் நடத்தி வரும் வைகோ, பாஜக கூட்டணியை விட , காங்கிரஸுடன் சமரசமாகி, கவுரமான இடங்களைப் பெற்றுப் போட்டியிடுவதே ம தி மு க வின் எதிர்காலத்திற்கு நல்லது.

No comments:

Post a Comment