Monday, October 28, 2013

ராகுல் சொன்னது உண்மை!

மத்தியப் பிரதேச தேர்தல் - பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, பி.ஜே.பி. மீது ஒரு பொதுவான குற்றச்சாற்றை வீசியுள்ளார்.
குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறை களில் சுகமாக வாழும் முதலாளிகளுக்கானது பிஜேபி என்பதுதான் அந்தக் குற்றச்சாற்று.



ராகுல்காந்தி கூறியிருக்கிறார் என்றாலும் அது நூற்றுக்கு நூறு உண்மையே!
எடுத்துக்காட்டாக, குஜராத் ஒளிர்கிறது என்றும், நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவையே குஜராத்தாக ஆக்கிக் காட்டுவார் என்றும் திட்டமிட்ட பிரச்சாரத்தை வாரி இறைத் துக் கொண்டு இருக்கிறார்களே - உண்மையில் குஜராத்தில் முதலமைச்சர் மோடி, யார் பக்கம் இருக்கிறார்? யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் ராகுல் காந்தி சொன்னதன் உண்மைக்கான அர்த்தம் புரியும்.

மேற்கு வங்காளத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது நானோ கார் தொழிற்சாலையை உருவாக்க டாட்டா திட்டமிட்டிருந்தார் விவசாய நிலங்கள் அவருக்காகத் தாரை வார்க்கப்பட்ட தாகக் கூறி பெரும் கிளர்ச்சி, அம்மாநிலத்தில் ஏற்பட்டதால் அங்கு நினைத்தபடி டாட்டா கார் தொழிற்சாலையைத் தொடங்கிட முடியவில்லை.
சும்மா இருந்து விடுவாரா குஜராத் முதல் அமைச்சர் மோடி, தொழிலதிபர்களை ஈர்ப்பதில் பன்னாட்டு நிறுவனங்களைத் தூண்டில் போட்டு இழுப்பதில் மோடிக்கு நிகர் யார் என்று  நலுங்கு பாடுவதில் பொருள் உண்டு.

மேற்கு வங்கத்திலிருந்த டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலையை தம் மாநிலத்தில் தொடங்குமாறு டாட்டாவுக்குத் தாம்பூலம் வைத்து அழைத்தார் மோடி அதற்காக முதல் அமைச்சர் மோடி, கொட்டிக் கொடுத்த சலுகைகள், விட்டுக் கொடுத்த தொகை அசாதாரணமானது.
1100  ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது.  அதற்கு முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து  இயந்திரங்களை குஜராத்துக்குக் கொண்டு வர வேண்டுமே - அதற்காக ஆன போக்குவரத்துச் செலவு ரூ.700 கோடி. அந்தத் தொகையையும் ஏற்றுக் கொண்டார் முதல் அமைச்சர் மோடி.
ஏழையல்லவா டாட்டா - அதற்காகக் கடனாக கொடுக்கப்பட்ட தொகை ரூ.9750 கோடி 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதும் அதற்கு விதிக்கப்பட்ட வட்டி - கேட்பவர்கள் அதிர்ந்து போய்விட வேண்டும்.
புள்ளி ஒரு சதவீதம் (.1ரூ)
ஒரு விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றினால் குஜராத் மாநில அரசின் விதிமுறைப்படி சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.6 அரசுக்குச் செலுத்த வேண்டும். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தொழில் வரியிலும் சலுகையாம். அம்மாநில சட்டப்படி எந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட் டாலும் உள்ளூர்க்காரர்களுக்கு 85 சதவீதம், வேலை வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும். இது தவிர, மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் உள்ளூர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இதற்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்த சலுகைகளின் கணக்கைப் பார்த்தால் குஜராத் மக்களின் வரிப் பணம் ரூ.30ஆயிரம் கோடி, பரம ஏழை(?) டாட்டாவுக்கு தாராளமாக தாரை வார்க்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.கார் ஒன்று ஒரு லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டால் 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள்  கார் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மான்யமாக அளிக்கிறார் கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று சாலைகளில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும் பெட்ரோலில் ஓடவில்லை. குஜராத் மக்களின் வரிப் பணம் என்னும் ரத்தத்தில்தான் ஓடுகிறது.
இப்பொழுது எளிதாகப் புரிந்து கொண்டு இருக்கலாமே - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிஜேபி பற்றி சொன்ன குற்றச்சாற்று துல்லிய மானது நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை!

No comments:

Post a Comment