Tuesday, October 15, 2013

தினமணியின் தலையங்கம்:விஷ(ம)ம் நிறைந்த கருத்து

திருப்பதி பிரம்மோற்சவத்தில் சுவாமி வீதிவலத்தின்போது குடையில் குண்டு வெடிக்கச் செய்யவிருந்த திட்டத்தையும் சென்னையில் ஒரு இந்துமதப் பிரமுகரைக் கொலை செய்யும் திட்டத்தையும் முறியடித்துள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுகள்.

 ஆந்திர மாநிலம் புத்தூரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த தீவிரவாதிகள், வீட்டை வெடிக்கச் செய்வோம் என்று மிரட்டியபோது, அருகில் குடியிருந்தவர்களை தாற்காலிகமாக வெளியேறச் செய்து, வீட்டுக்குள் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி அனைவரையும் உயிருடன் பிடிப்பதில் தமிழ்நாடு காவல்துறை கையாண்ட உத்திகளையும் நாம் பாராட்டியாக வேண்டும்.



 இருப்பினும், 2011 அக்டோபர் 28-ஆம் தேதி மதுரை திருமங்கலம் அருகே, பாஜக தலைவர் அத்வானி செல்லவிருந்த பாதையில்,  தரைப்பாலத்துக்கு கீழே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நாளிலேயே, தீவிரமான விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டிருந்தால், மதுரையைச் சேர்ந்த இந்த மூவரையும் எப்போதோ கைது செய்திருக்க முடியும். காவல்துறை அப்போது மெத்தனமாக செயல்பட்டது என்ற நினைப்போடுதான் இப்போது பாராட்ட வேண்டியுள்ளது.

 ஆந்திர மாநிலம், புத்தூரில் இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தங்கியிருந்துள்ளனர். புத்தூரிலிருந்து சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இவர்களைப் பற்றி இப்போதுதான் தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம், சேலம் ஆடிட்டர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் குறித்து  தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் பரிசு என கடந்த ஜூலை 24-ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை அறிவித்தது. இந்த நடவடிக்கையால் நிறைய துப்புகள் கிடைத்திருக்கும் என்பது உறுதி.
  குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதைக் காட்டிலும், மாநில காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுத் தருவதுதான். பல வழக்குகளில் இவர்களைக் கைது செய்யும்போது ஏற்படும் பரபரப்பு, விரைவிலேயே நீர்த்துப் போகிறது. தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அவர்கள் அப்பாவிகள் என்று கூறி, களத்தில் இறங்கவும், காவல்துறையினரின்  பொய்வழக்கு என்று குறை சொல்லவும் மனித உரிமை அமைப்புகள் நிறைய இருக்கின்றன.

 அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் இந்த குழுக்கள், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் முழுவதையுமே இதுபோன்று அநியாயமாக கைது செய்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த சமுதாயத்தையும் மதச்சார்பற்ற மக்களையும் பீதியில் ஆழ்த்துகின்றன. குண்டுவெடிப்பு சில உயிர்களைத்தான் பலி கொள்ளும். இதுபோன்ற மனித உரிமையாளர்களின் அக்கறை - சமூகப் பிளவையே ஏற்படுத்தக்கூடியவை.



 தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் இளைஞர்கள்தான். இவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று காவல்துறை நிரூபிப்பது உடனடியாக சாத்தியமில்லை. இவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்று தெரிந்திருந்தாலும்கூட, நீதிமன்ற நடைமுறைக்குத் தேவைப்படும் ஆதாரங்களைத் திரட்ட காவல்துறைக்கு கால அவகாசம் தேவைப்படும். அதற்காக இவர்களை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே போன்றோர் சொல்வதைப் போல அப்பாவி என்று சொல்வதும், இவர்களை சிறையில் அடைத்ததை அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் மீது அடையாளப்படுத்தி, மனித உரிமை அமைப்புகள் களத்தில் குதிப்பதும் தீவிரவாதத்தை எதிர்கொள்ளத் தடையாக இருக்கும்.

கைது செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என்பதாலேயே, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தைப் பழிப்பதோ, தீவிரவாதிகளாகப் பார்ப்பதோ மிகவும் கொடுமை. சில யானைகளுக்கு மதம் பிடிக்கிறது. அதற்காக, எல்லா யானைகளையும் ஒதுக்கியா விடுகிறோம்? நடுநிலையாளர்கள் இந்தப் பிரச்னையில் கவனமாக இருக்க வேண்டும். மத நல்லிணக்கத்தையும், இணைந்து வாழ விரும்பும் உணர்வையும் கொண்ட முஸ்லிம்களின் மனம் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

பிடிபட்டிருக்கும் தீவிரவாதிகளிடம் முறையான விசாரணை நடத்தி, தமிழகத்தில் ஊடுருவி இருக்கும் இந்த பயங்கரவாதப் போக்கு சல்லி வேர், ஆணி வேர் இல்லாமல் பிடுங்கி எறியப்பட வேண்டும். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டின் நிம்மதியைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும், என்ன ஜாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதில் அரசும் காவல்துறையும் எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சிப்பவர்களும் தண்டனைக்குரியவர்களே!

தினமணியின்-தலையங்கத்தை படிக்க பொதுவான கருத்தாக இருந்தாலும் விஷ(ம)ம் நிறைந்த  கருத்து ---இந்த பயங்கரவாதப் போக்கு சல்லி வேர், ஆணி வேர் இல்லாமல் பிடுங்கி எறியப்பட வேண்டும். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டின் நிம்மதியைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும், என்ன ஜாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.என்ற கருத்தை நான் வழி மொழிகிறேன் அதே சமயம் நாம் அந்த சல்லி வேரை வெந்நீர் ஊற்றி அழித்தொழிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். நமது இந்திய திரு நாட்டில் பல முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆயுத பயிற்சி வழங்குவதோடு நாங்கள் தாம் தேச பக்தர்கள் என்று இதில் அவர்களுக்கு பம்மாத்து வேறு எனவே யாராக இருந்தாலும், என்ன ஜாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இது போன்ற இயக்கங்களை மீண்டும் தடை செய்தால் நம் இந்தியா ஒளிரும் மிளிரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

No comments:

Post a Comment