Tuesday, October 29, 2013

தமிழில் பேச தடை விதித்த பாஜக தலைவர்!

கோலார் தங்கவயல் : தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் கோலார் தங்கவயல் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழில் பேச பாஜக தலைவர் தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார் தங்கவயல் பகுதியிலுள்ள நகராட்சி மைதானத்தில் பாஜக சார்பில் தொகுதி மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் அசோக், முன்னாள் எம்.எல்.ஏ சம்பங்கி மற்றும் எம்.எல்.ஏ ராமக்கா உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சம்பங்கி தனது பேச்சை தமிழில் பேச ஆரம்பித்தார். உடனே, மேடையிலிருந்த பாஜக தலைவர் அசோக், சம்பங்கியிடம் தமிழில் பேசக்கூடாது என மேடையிலிருந்தே கூறினார்.  ஆனால், இதனை ஏற்க மறுத்த சம்பங்கி, "இங்குள்ள மக்களில் 90% பேர் தமிழர்கள். அவர்கள் புரிய வேண்டுமானால், அவர்களுக்குத் தெரிந்த தமிழ் மொழியில் தான் பேச வேண்டும். அப்போது தான் நமது கருத்துக்களை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள்" என்று கூறி விட்டு தனது உரையை தமிழிலேயே தொடர்ந்தார்.   
பாஜக தலைவர், மேடையிலேயே தமிழ் மொழியில் பேசக்கூடாது என்று தடை விதித்தது மக்களிடையே பெரும்  அதிருப்தியை ஏற்படுத்தியது.  இப்பகுதியில், வழக்கமாக தமிழ் தெரியாத தலைவர்களும், பேச்சை ஆரம்பிக்கும் போது மரியாதை நிமித்தமாக வணக்கம் என்று கூறும் வார்த்தையைக் கூட இக்கூட்டத்தில் அசோக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment