Saturday, October 19, 2013

பி.ஜே.பி.க்கு, வி.எச்.பி. அனுகூலசத்ருவா?

உத்தரப்பிரதேசத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தினர், அயோத்தி நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டனர். அதற்கு உ.பி. மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் (11.9.2013) என்ன சொல்லுகிறார்?
கேள்வி: விசுவ ஹிந்து பரிஷத்தின் அயோத்தி யாத்திரையால் பா.ஜ.க.வுக்குப் பலமா, இல்லை பலகீனமா?
பதில்: விசுவ ஹிந்து பரிஷத் பா.ஜ.க.விற்கு அனுகூலசத்ரு. நல்லது செய்கிற மாதிரி நினைத்துக் கொண்டு, தர்ம சங்கடத்தை  உண்டாக்குவதில் விசுவ ஹிந்து பரிஷத்தை மிஞ்ச முடியாது. அவர்களால் பா.ஜ.க.விற்கு புதிதாக ஹிந்து வாக்கு சேராது. மைனாரிட்டி வாக்கு குறையும் என்று பதில் எழுதுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? வி.எச்.பி.யை, பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்று கூறுகிறார் திரு சோ. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் வி.எச்.பி. யாத்திரைக்கு உ.பி. அரசு அனுமதி மறுத்ததையும் அதனை மீறி யாத்திரை செய்ய முயன்ற வி.எச்.பி. தொண்டர்களை உ.பி. அரசு கைது செய்ததையும் கண்டித்துள்ளது பி.ஜே.பி. என்பதை மறந்து விடக் கூடாது. கைது செய்யப்பட்டவர்களுள் பிஜேபி எம்.பி.யும் ஒருவர்!
உ.பி., பி.ஜே.பி. அந்த யாத்திரையை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை; ஆனால் சோ எழுதுகிறார் வி.எச்.பி., பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்.
திருவாளர் சோவைப் பொறுத்த வரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரிக்கக் கூடியவர், இராமன் கோயில் அங்கு இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்தான்.
பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் ஆணையத்தின் அறிக்கையை திரு சோ ராமசாமி எப்படி எல்லாம் கண் மூடித்தனமாக எதிர்த்து விமர்சனம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிப்புக்குற்றவாளிப் பட்டியலில் வாஜ்பேயியையும், லிபர் ஹான் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது. அடேயப்பா எவ்வளவு குதி குதித்தார்கள் இந்தப் பிஜேபியினரும், சங்பரிவார்களும்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் வாஜ்பேயி மட்டும் விதிவிலக்கா? அவர் மட்டும் அசல் பசு மாட்டு நெய்யில் பொரிக்கப்பட்டவரா?
நானாவதி ஆணையம், மோடிக்குச் சாதகமாக இருந்ததால் ஆணையமே கூறி விட்டது என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவிக் குதித்து எழுதுகிறார் துக்ளக் ஆசிரியர்.
லிபர் ஹான் ஆணையம், அவாளைக் குற்றப்படுத்தினால் ஆணையத்தின்மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவார்கள்.
ராம ஜென்ம பூமி விடயத்தில் பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன என்பது உலகம் அறிந்த உண்மை! அதே நேரத்தில் அரசியல் லாப - நட்டம் கருதி அதனைச் சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது அதைவிடப் பெரிய உண்மை.
பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி, அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற இதே விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் என்ன பேசினார்?
எங்களுக்குப் பெரும்பான்மை கிட்டினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமன் கோயிலைக் கட்டுவோம். நான் பிரதமர் என்பதைவிட சங்பரிவாரைச் சேர்ந்தவன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன் என்று பேசவில்லையா?
ஆனால் சோ ராமசாமி சொல்லுகிறார் வி.எச்.பி., என்பது பி.ஜே.பி.க்கு, அனுகூலசத்ரு என்கிறார்; இவர்களின் இரட்டை வேடத்துக்கு அளவே கிடையாது.
நன்றி:விடுதலை 

No comments:

Post a Comment