Wednesday, October 9, 2013

முஸஃபர்நகர் கலவரம்: விசாரணை கமிஷன் முன்பாக நூற்றுக் கணக்கான புகார்கள்!

முஸஃபர் நகர்: உ.பி. மாநிலம் முஸஃபர்நகரில் நிகழ்ந்த கலவரம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு நியமித்த முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்ணு ஸஹாய் தலைமையிலான ஒரு உறுப்பினர் கமிஷன் முன்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் எழுத்து மூலம் கிடைத்துள்ளன.


முஸஃபர்நகர், ஷமாலி, மீரட், பக்பத், ஸஹாரன்பூர் ஆகிய மாவட்டங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விசாரணை கமிஷன் நேற்று சென்றது. கலவரம் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்த கமிஷன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தது.
கலவரம் குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை கமிஷனுக்கு தெரிவிக்குமாறு நீதிபதி விஷ்ணு ஸஹாய் தெரிவித்தார். கலவரத்திற்கு காரணங்கள், கலவரம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், இத்தகைய கலவரங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கலவரத்திற்கு காரணமானவர்கள் யார் ஆகியன கமிஷன் முன்னுரிமை அளிக்கும் காரியங்களாகும்.
அதேவேளையில், கலவரம் அப்பகுதியில் குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலவரம் பாதித்த பகுதிகளில் பெரும்பாலான மாணவர்களும் பள்ளிக்கூடம் செல்வது குறைந்துள்ளது.
மாவட்டத்தில் பள்ளிக்கூட கல்வி கிடைக்க வேண்டிய பருவத்தில் உள்ள 1.7 லட்சம் குழந்தைகளில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பள்ளிக்கூடங்களுக்கு தொடர்ந்து செல்கின்றனர்.
முன்னர் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு நிறுத்தப்பட்டபோது பொருளாதார காரணங்களால் 60 ஆயிரம் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினர்.

No comments:

Post a Comment