Wednesday, October 2, 2013

மியான்மரில் கலவரம் பரவுகிறது!: 70 வீடுகள் தீக்கிரை! மூதாட்டி படுகொலை!...

யங்கூன்: மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் மீண்டும் கலவரம் பரவுகிறது. நேற்று முன் தினம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய புத்த தீவிரவாதிகளை போலீஸ் விரட்டியடித்திருந்தது.
இந்நிலையில் தாந்த்வியில் உள்ள தப்யான்சயிங் கிராமத்தில் நேற்று மதியம் மீண்டும் திரண்ட புத்த தீவிரவாதிகள் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். இதில் 70 வீடுகள் தீக்கிரையாகின. 94 வயது மூதாட்டி ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.


கலவரம் நிகழ்ந்த பகுதிக்கு இரவு வெகுநேரம் கழித்து வந்த மியான்மர் அதிபர் தைன் ஸைன் அதிகாரிகளுடன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை சூழல் நீடிக்கும் இப்பகுதிக்கு முதன் முறையாக அதிபர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் புத்த தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்ட தாந்த்வி, மோங்டோ ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
கடந்த சனிக்கிழமை ராக்கேன் மாநிலத்தில் புத்த தீவிரவாதிகள் மீண்டும் முஸ்லிம்கள் மீதான வன்முறையை துவக்கினர். கமான் முஸ்லிம் கட்சியின் தலைவர் க்யோஸான் ஹியாவின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மாற்றக் கோரியபோது வாய்த் தகராறு எழுந்தது.
க்யோஸான் புத்த மதத்தை அவமதித்து விட்டார் என்ற பொய்யான செய்தி பரவியதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் திரண்டு அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகளையும், மஸ்ஜிதையும் தகர்த்தது.
க்யோஸானிடம் போலீஸ் விசாரணை நடத்தி விடுவித்தது. புத்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து முஸ்லிம்கள் நேற்று முன்தினம் வீடுகளிலிருந்து வெளியே வரவில்லை. தாந்த்வியில் மூன்று தினங்களுக்கு முன்பு இது போன்றதொரு சம்பவத்தில் ஏராளமான முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. கடந்த ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் எதிர்ப்பு கலவரத்தில் 237 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment